Thursday, June 12, 2008

பணம் என்னும் மாய பேய்!

கரிகால் சோழன் ஆட்சி செய்த காலத்தில், ஒருவர் தனது நிலத்தை இன்னொருவருக்கு விற்றாராம். நிலத்தை வாங்கியவர் அதை வீடுகட்ட தோண்டியபோது ஒரு புதையல் ஒன்று கிடைத்ததாம். உடனே அதை எடுத்துக்கொண்டு நிலம் விற்றவரிடம் சென்று நான் நிலத்தை மட்டும் தான் உங்களிடம் வாங்கினேன் இந்த புதையல் அதன் உள்ளே இருந்தது இது உங்களுடையது என்றாராம்.

நிலத்தை விற்றவரோ நான் நிலத்தை விற்றபோதே அதில் உள்ள எல்லாமே உங்களுடையது ஆகிவிட்டது, இதில் எனக்கு பங்கு இல்லை நீங்களே அந்த புதையலை வைத்துக்கொள்ளுங்கள் என்றாராம். இந்த வழக்கு கரிகால் சோழனிடம் தீர்ப்புக்கு வந்தது என்று வரலாறு கூறுகிறது.

இப்படி சம்பவங்கள் நடந்த இந்த நாட்டில் இப்பொழுது இல்லாத புதயலுக்காக பெற்ற மகளையே பலியிட துணியும் அவல நிலை அரங்கேறுகிறது.


இதற்க்கெல்லாம் காரணம் மனிதர்களை பிடித்துள்ள பணஆசை என்னும் மாய பேய்தான்.


இன்று உலகில் மனிதர்கள் எல்லாவற்றையும் விட அதிகம் மதிப்பது பணத்தை தான் என்று சொல்லலாம். அநேகர் பணத்துக்க்காககவும் நல்ல உலக வாழ்க்கைக்காக மட்டுமே இறைவனையே தேடுகின்றனர். .


மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் பணத்தின் அடிப்படையில் மதிப்பது என்பது இன்று நாம் காணும் இந்த உலகில் சகஜமாகிவிட்டது. சொந்த வீட்டுகாரருக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு சிறிதளவு கூட வாடகை வீட்டு காரருக்கும் கிடைப்பது இல்லை என்பது நடைமுறை நிலைமை! இன்னும் சிலர் ஒருவருடன் பேச வேண்டும் என்றால்கூட அவரது ஆடை அணிகலன்கள் எல்லாவற்றையும் நோட்டம் விட்டு, ஒரு திருப்தி நிலைக்கு வந்தால்தான் பதிலே பேசுகிறார்கள். இல்லை என்றால் கேட்கும் சிறு கேள்விக்கு சரியான பதில் கூட கிடைக்காத நிலை உள்ளது.


இந்த நிலைமை "கலியுகத்தில் மனிதர்கள் காமம் செல்வம் இவற்றால் கவரப்பட்டு விடுவார்கள்" என்று பகவத்கீதை சொல்வதும். "பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது" என்று பைபிள் சொல்வதும் உண்மை என்பதை நிரூபிப்பது போல் உள்ளது


இன்று உலகில் நடக்கும் அனேக கொலை கொள்ளை விபச்சாரம் போன்ற எல்லா தீமைக்கும் அடிப்படை காரணம் பணம்தான். கந்து வட்டி வாங்குவது, லஞ்சம் வாங்குவது, கடன் வங்கி திரும்ப செலுத்தாமல் போவது, நம்பிக்கை துரோகம் செய்வது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தமால் ஏய்ப்பது, பிறரை ஏமாற்றி மற்றும் ஊழல் மூலம் பணம் சம்பாதிப்பது போன்றவை எல்லாம் பண ஆசையினால் வரும் தீமையில் அடங்கும்.


இது போன்ற செயலால் ஏமாற்றப்பட்டு குடும்பமாக தற்கொலை செய்து கொண்டவர்களும், புத்தி பேதலித்து பயித்தியம் ஆனவர்களும், வாழ்க்கையை இழந்து போனவர்களும் ஏராளம்!


இன்று ஏமாற்றி பணம் சேர்ப்பதும் சொகுசாய் வாழ்வதும் நல்லது போல தெரிந்தாலும் அது கண்டிப்பாக ரொம்பநாள் நீடிப்பது இல்லை. ஏனெனில் "பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளின் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை விசாரிப்பேன்" என்று இறைவன் கடுமையாக எச்சரித்து உள்ளார்.


எனவே அன்பர்களே,

பணஆசை என்ற மாய பேயை ஒழிப்போம்!

மனிதனை மனிதனாக மதிப்போம்!

நேர்மையாய் பொருள் ஈட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்!

No comments: